கேள்வி-பதில்

ஈழத்தமிழர்களின் தன்னாட்சியையும், இறைமையையும் கோரிநின்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தலுக்கான வாக்களிப்பானது எதிர்வரும் பத்தாம் திகதி நோர்வேயில் நடைபெறவுள்ளது. ஊத்றுப் எனும் நேர்வேஜிய பிரபல பத்திரிகை நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாக்கெடுப்பு சம்பந்தமாக, நோர்வேஜிய போதனா வைத்தியசாலையில் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் அவர்கள், நோர்வேஜிய அரச பெருந்தெருக்கள் திணைக்களத்தின் சிரேஸ்ட  பொறியியலாளராகக் கடமையாற்றும் திரு சதானந்தன் மூத்ததம்பி ஆகியோருடனான நேர்காணல்

கேள்வி:
இப்படியான ஒருமுயற்சி எந்தவகையில் ஈழத்தமிழரின் இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வுதரக்கூடியது என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்:
ஈழமக்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகூறும் முயற்சியில் சர்வதேச அரசுகளே சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை இன்று இருக்கின்றது. ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசானது, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றது என்னும் எடுகோளை வைத்திருக்கின்றது. இதனால் அவர்களால் சரியான தீர்வினைக்காண முடியாமல் உள்ளது. இலங்கையில் ஜனநாயக தேர்தல் என்பது உண்மையான ஜனநாயக தேர்தல் அல்ல. அது எப்போதுமே பெரும்பான்மைச் சிங்கள மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே அமைந்துவந்திருக்கிறது. இது இலங்கையின் அரசியல் அமைப்பின்படி மாற்றப்பட முடியாதது. இவ்வரசியல் அமைப்பின்படி தமிழர்களின் ஜனநாயக கருத்துக்களை வெளிப்படுத்தவோ, உறுத்திப்படுத்தவோ வகையில்லை. இதனால் சர்வதேச நாடுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் உள்ளது. இத்தகைய உறுதிப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பானது, எமது சிக்கலகளைத் தீர்க்க முயற்சிக்கும் சர்வதேச நாடுகளுக்கு உதவி செய்யும்.

கேள்வி:
இக்கருத்துக் கணிப்புக்கான நடைமுறைகள் எவை? யார் நடத்துகிறார்கள்? யார் வாக்களிப்பார்கள்? யார் கணக்கெடுப்பார்கள்? வாக்களிப்பினையும், வாக்குகள் எண்ணுவதனையும் யார் உறுதிப்படுத்துவார்கள்? எந்த அடிப்படையில் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்?

பதில்:
இக்கருத்துக் கணிப்பானது நோர்வேஜிய பத்திரிகையான
ஊத்றுப் ஊடக நிறுவனத்தினரால் நடத்தப்படுகின்றது.

வாக்களிக்கும் தகுதிபெற்றோர்:
இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களில்@
1991ஆம் ஆண்டும், அதற்கு முன்னரும் பிறந்து நோர்வேயில் வசிப்பவர்கள்

இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களின் சட்டபூர்வ வாழ்க்கைத் துணைவர்கள்.

இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் (தாய் அல்லது தகப்பன் இலங்கைத் தமிழ்ப் பரம்பரையாக இருந்தாலும் பொருந்தும்)

இவ்வாக்கெடுப்பானது, எதுவித பக்கசார்பற்ற நோர்வேஜியர்களைக் கொண்ட குழுவொன்றினால் நடத்தப்படும். இத்தேர்தலானது நேர்மையாக நடைபெறுகின்றதா என்பதனைக் கண்காணிப்பதற்காக நகரசபை உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோர் அனுமதிக்கப்படுவர். தவிரவும் வாக்குக் கணிப்பின் ஆரம்பத்திலும் முடிவுகளை எண்ணும் போதும் சாவடிகளில் இரண்டு தமிழர்கள் வாக்குக் கணிப்பை பார்வையாளர் சாட்சியங்களாக நின்று பார்வையிடுவர். வாக்கு எண்ணல் வீடியோவிலும் பதிவாகும்.

குறிப்பு:
வாக்களிப்பில் முழுமையான இரகசியம் பேணப்படும்.
வாக்களித்தவர்களின் பெயர்களோ அல்லது அவர்களின் தனிப்பட்ட விபரங்களோ எந்தவகையிலும் பதிவு செய்யப்பட மாட்டாது.

கேள்வி:
வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 33 ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்கிடையில் உலகிலும், இலங்கைத்தீவிலும் மாற்றங்கள் பல ஏற்பட்டுவிட்டன. மீளவும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு குறிப்பான காரணங்கள் ஏதாவது உண்டா?

பதில்:
ஆம், முதலாவது
ஒவ்வொரு தலைமுறையினரும் தத்தமது காலத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் இச்சிந்தனையில் உள்ளார்களா என்பதற்கு இவ்வாக்கெடுப்பானது உதவும்.

இரண்டாவது
ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்குப் பின்னால் இருக்கின்ற அவர்களது அரசியல் அபிலாசை என்ன என்பது குறித்த ஒரு கணிப்பை இது காட்டும். 

மூன்றாவது
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை உறுதிப்படுத்திய 1977ஆம் ஆண்டுத் தேர்தலே இலங்கைத்தீவில் நடந்த சுதந்திரமாக நடைபெற்ற இறுதியான தேர்தல் இது என்பதையும், அதற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் எதிலும் தமிழர்களால் சுதந்திரமான முறையில் தனிநாடு குறித்த தமது அபிலாசையை வெளிப்படுத்தி வாக்களிக்க முடியவில்லை என்;ற பின்னணியையும் நாங்கள் இங்கு பார்க்கவேண்டும். ஏனெனில் 1979ம் ஆண்டில் சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமும்,  1983ம் ஆண்டின் அரசியல் சட்டயாப்பின் 6 வது சீர்த்தமும் தமிழரின் தன்னாட்சி, தேசியம் தொடர்பான கருத்துக்களை ஜனநாயக வழியில் வெளிப்படுத்த தடையாக இருந்துவந்துள்ளன.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானமே ஈழத்தமிழர் தங்கள் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் வகையிலான ஆணையைக் கொண்ட ஆதாரபூர்வமாக ஜனநாயக ரீதியில் நிரூபிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சான்றாதாரமாக இருக்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்துமே அத் தீர்மானத்தில் வெளியிடப்பட்ட தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை எந்தவகையிலும் நிவர்த்திசெய்யவோ சீரமைக்கவோ தகுந்தவகையிலான விளைவுகளை ஈட்டவோ இல்லை. இந்த நிலையில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான ஆணையை ஜனநாயக ரீதியில் கணிப்பீடு செய்யக்கூடிய இடங்களில் உரிய முறையில் கணிப்பிடவேண்டியது அவசியமாகிறது.

கேள்வி:
ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான உடனடிச்சிக்கல்கள் இருக்கும் காலத்தில் இம்முயற்சிக்கு முக்கியத்துவம் உண்டா?

பதில்:
உடனடிச் சிக்கல்களில் ஒரு முக்கிய பரிமாணமானது, தமிழர்களை நீண்டகால அடிமைகளாக ஆக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அரசியல் இராணுவச் சூழல். உடனடிச் சிக்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் அதன் அடிப்படையை அணுகி அதனை உரிய முக்கியத்துவத்தோடு வெளிப்படுத்தும் முயற்சியானது கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறான இன்றைய சூழலில் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாசை குறித்து, குறிப்பாக நோர்வேயில் வாழும் தமிழர்கள் வட்டுக்கோட்டைக் கோட்பாட்டின் அடிப்படைகளை மீளவும் வலியுறுத்துகிறார்களா இல்லையா என்பது சர்வதேச சமுகத்திற்கு சில அடிப்படைகளை மீள வலியுறுத்துவதாக நிச்சயம் அமையும்.

கேள்வி:
புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மாத்திரம் பங்குகொள்ளும் இம்முயற்சி எந்த வகையில் ஈழத்தில் வாழும் எம்மக்களுக்குப் பயன்தரக் கூடியதாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்:
ஈழப்போராட்டத்தின் முக்கியமான ஒரு அங்கமாக புலம்பெயர்ந்த சமுகம் உள்ளது என்பதனை சர்வதேசம் இப்போது பகிரங்கமாகக் கூறிவருகிறது. வருகின்றது. இந்தவகையில் வன்னியில் திட்டமிடப்பட்ட முறையில் சிறீலங்கா அரச படையினரால் கொன்றொழிக்கப்படும் தம் உறவுகளுக்காக@ திறந்த வெளிச்சிறைச்சாலையிலும், தடுப்புமுகாம்களிலும் இருக்கும் ஈழமக்கள் இன்று வாய்திறந்து ஓர் அனுதாபத்தைக்கூடக் கூறமுடியாத போது சர்வதேசமும் தனது கருத்துநிலைகளில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமானால் எமது அபிலாசைகள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தப்படுவது அவசியமாகின்றது.
இன்று வன்னிப் பகுதிக்கு அருகில் இருக்கும் அம்பாறை, திருக்கோணமலை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் முதலான பகுதிகளில் வதியும் ஈழமக்கள் இன்றைய அவலத்தைப் பார்த்தும் வாய்திறந்து ஆறுதல் வார்த்தையோ அல்லது இறைவனிடம் சென்று வழிபாடுகூட நடத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்நிலைமையில் சுதந்திரமாகக் குரல் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் புலம்பெயர் தமிழ்மக்கள் மட்டுமே.

கேள்வி:
வட்டுக்கோட்டைத் தீர்மானமானது வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிக்கோளாகக் கொண்டது. இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

பதில்:
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை நிறைவேற்றிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முக்கிய அங்கமாக மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் இருந்தமையையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ்அரசு உருவாகும் போது@ வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையாக இருக்கப் போகின்ற சிங்களவர்களோ அல்லது சிறீலங்காவில் சிறுபான்மையாக இருக்கக் கூடிய தமிழர்களோ பாதிக்காத வகையிலான சில ஆலோசனைகளை வட்டுக்கோட்டைத் தீர்மானமானது கொண்டிருக்கின்றது. உதாரணமாக பரஸ்பர சமநிலைத் திட்டம் ஒன்றை இத்திட்டம் கொண்டுள்ளது.

கேள்வி:
இன்றைய இலங்கையின் ஒருமையையும், இறைமையையும் பாதிக்கக்கூடிய இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன உரிமையுண்டு?

பதில்:
பிரித்தானியரால் சிறுபான்மையினருக்கான சில பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசியல் அமைப்புச் சட்டமானது, 1972ம் ஆண்டு சிங்கள அரசால் மாற்றப்பட்டது. 1972ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டுப் பெரும்பான்மையான தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தனர். 1972 ஆம் ஆண்டின் சட்டயாப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதானது@ 1974ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கேசன்துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் நிறுவப்பட்டிருந்தன. எனவே 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த அனைத்துத் தமிழர்களுக்கும், அவர்களது வம்சாவளியினருக்கும் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. வருங்காலத்தில் இலங்கைத்தீவில் உருவாகும் தீர்வுகள் அனைத்திலுமே இவர்களுக்குப் பங்கும் உரிமையும் உண்டு. நாம் இன்று எந்த நாட்டுக்குடியுரிமை பெற்றிருந்தாலும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

கேள்வி:
இந்நடவடிக்கையானது இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசுகள் மத்தியில் எவ்வகையான விளைவுகளைக் கொண்டுவரும் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்?

பதில்:
சர்வதேச நாடுகள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுகளை 13வது திருத்தச் சட்டத்துக்குள் முடிப்பதற்கே விரும்புகின்றன. எமது தீர்க்கமான முடிவுகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதன் மூலமாக சர்வதேசத்தின் முடிவுகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என நாம் திடமாக நம்புகின்றோம்.

கேள்வி:
மிகக்குறுகியகால அவகாசத்தில் இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கான காரணங்கள் ஏதாவது உண்டா?

பதில்:
ஆம், ஈழத் தமிழர்களின் போராட்டமும், அதன் மீதான சர்வதேசத்தின் கவனமும் என்றுமில்லாதவாறு உச்ச நிலையை அடைந்துள்ளது. இந்நிலைமையை எமக்குச் சாதகமாக்க வேண்டியது அவசியமானதும், உடனடித் தேவையுமாகும்.
உதாரணமாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உகந்த தீர்வு தமிழீழமே எனவும், அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தான் முக்கிய பங்கு வகிக்கப் போவதாகவும் பகிரங்கமாக அறிவித்ததுடன் அதற்கு ஆதரவும் தேடிவருகின்றார்.
இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்குத்  தொடர்ந்தும் இராணுவத் தீர்வுகாண முற்பட்டால், அந்நிலைமையானது இலங்கையின் இறைமையைப் பாதிப்புக்குள்ளாக்கும் என அமெரிக்க அதிபரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சர்வதேச நிலைப்பாடுகளுக்கு நாம் எடுக்கப்போகும் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமானது பெரிய அளவில் உதவியாக அமையும் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி:
விடுதலைப் புலிகளின் ஆயதப் போராட்டத்துக்கும், இம்முயற்சிக்கும் தொடர்புகள் ஏதாவது உண்டா?

பதில்:
அவ்வாறான தொடர்புகள் ஒன்றும் இல்லை. இது ஒரு பக்கச்சார்பற்ற பத்திரிகையின் முன்னெடுப்பாகும். தவிரவும், தமிழீழப் போராட்டம் என்பது பரந்துபட்ட தமிழரின் போராட்டம் ஆகும். சிறீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகளே அதனை ஆயுதப் போராட்டமாக மாற்றியது என்பதையும் இங்கு நாங்கள் நோக்கவேண்டும். 

கேள்வி:
மாற்றீட்டு வழிமுறைகளைக் கணக்கிற் கொள்ளாமல் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தையும், தமிழீழ உருவாக்கத்தையும் மாத்திரம் வலியுறுத்துவதால் இம்முயற்சியில் தேர்வு இல்லை, கருத்துக் கணிப்பு மாத்திரமே உண்டு. இதற்கான விளக்கங்கள் ஏதாவது உங்களிடம் உண்டா?

பதில்:
தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட மாற்றீட்டு முயற்சிகள் அனைத்துமே 30 ஆண்டுகளாகத் தோல்வியைச் சந்தித்தமையே வரலாறாகும். எனவே எமக்கு வேறு திட்டங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. எமது கோரிக்கையை சர்வதேசத்தின் முன்னால் நாங்கள் முன்வைப்போம். அரசு தனது நிலையை வெளிப்படையாக சர்வதேசத்தின் முன்வைக்கட்டும். அதுவே எமது நிலைப்பாடு.

கேள்வி:
தமிழரின் தாயக விடுதலைக்காகப் போராடிய முக்கிய இயக்கங்களால் இணைந்து முன்வைக்கப்பட்ட திம்புக் கோரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நீங்கள் முன்வைத்து வாக்களிக்குமாறு கூறுவது எதற்காக?

பதில்:
வட்டுக்கோட்டைக்குப் பின்னால் வந்த முன்னெடுப்புக்கள் சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படைகளை மாத்திரமே கருத்திற்கொண்டவை. அவை ஏற்றுக்கொள்ளப்படாததால் அதற்கப்பால் தமிழர்களுக்கான தெளிவான அரச கட்டமைப்பைத வெளிப்படுத்தக்கூடிய நிலைக்கு போக முடியவில்லை.

வட்டுக்கோட்டைப் பிரகடனத்திற்குப் பின்னால் வந்ந முன்னெடுப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மக்களாட்சி முறைகளால் உறுதிப்படுத்தப்பட்டவையுமல்ல.

சர்வதேசத்துக்குத் தெளிவாக முன்வைக்கப்படக்கூடிய, மக்களாட்சி முறையால் நிறைவேற்றப்பட்ட சிறப்புத்தன்மை வட்டுக்கோட்டைப் பிரகடனத்திற்கு இருக்கிறது.

கேள்வி:
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் நோர்வேயில் வாழும் முக்கிய தமிழர் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைத்திருந்தீர்கள்.
எங்கள் பகைவர் எங்கும் நிறைந்தார் இங்குள்ள தமிழர்கள் வேறாதல் கண்டு
என்னும் எமது வழமையான நிலையை மாற்றி, பாவேந்தர் கனவான
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
என்னும் நிலையை ஒரேநாளில் நடத்திக் காட்டியிருக்கின்றீர்கள்
இது எப்படிச் சாத்தியமாயிற்று?

பதில்:
ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக நாம் ஏற்றிருக்கும் வழிகள்
வேறுவேறானதாக இருப்பினும், எம் அனைவரினதும் இதயங்களில்
இன்றிருக்கும் எண்ணங்கள் ஒன்றுதான் ..
இந்த உண்மைதான் ஒஸ்லோ மாநகரில் வெளிப்பட்டிருக்கின்றதென
நாம் திடமாகக் கூறுவோம்.

கேள்வி:
இந்த ஒற்றுமை தொடருமா?

பதில்:
நல்ல கேள்வி. இந்தக் கேள்வியை எம்மிடம் பலர் திரும்பத் திரும்பக் கேட்ட வண்ணமுள்ளார்கள். அதில் எவருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
மனைவி கொண்டிருக்கும் அரசியல் சிந்தனையைக் கணவனும்,
கணவன் கொண்டிருக்கும் அரசியல் சிந்தனையைக் மனைவியும்
அறிய முற்படுவதே அநாகரிகமானது எனும் ஜனநாயக விழுமியங்களைக் கொண்டிருக்கும் நாட்டில் வாழும் நாம்,
மற்றவர்களின் அரசியல் சிந்தனைக்கும் மதிப்பளித்து
வேற்றுமையில் ஒற்றுமைகாண வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் அல்லவா நிற்கின்றோம்.

கேள்வி:
நோர்வேவாழ் தமிழர்களின் ஒற்றுமையானது, புலம்பெயர் நாடுகளுக்கும் உதாரணமாக அமையும் எனக் கருதுகின்றீர்களா?

பதில்:
தங்கள் கேள்வியைப் பார்த்தால் இதுவரை எம்மிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்திருப்பதாக உட்பொருள் தொனிக்கின்றது. உண்மை அப்படி அல்ல. ஈழத்தமிழர்களின் விடிவுக்கான போராட்டங்களில் முரண்பாடுகள் இருந்தன ஆனால், ஆழ்மன விருப்பத்தால் ஈழத்தமிழர்கள் இணைக்கப்பட்டே இருந்திருக்கிறார்கள்.

கேள்வி:
நோர்வேயில் வாழும் தமிழர்கள் அனைவரையும் தங்களது பிரச்சாரம் சென்றடையும் எனக்கருதுகின்றீர்களா?

பதில்:
ஆம். நோர்வேயில் இயங்கிவரும் தமிழர் அமைப்புகள் அனைத்துடனும் நாம் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களினூடாகவே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம். நோர்வேயில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்  வாக்கெடுப்பு பற்றிய விபரங்களைத் தரக்கூடிய ஆற்றல் தமிழர் அமைப்புகளிடம் உள்ளது. தமிழர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் எம்மைவிட வேகங்கொண்டவர்களாக இருக்கின்றார்கள். வாக்கெடுப்பு சம்பந்தமான விபரங்களைத் தெரிவிக்கும் கூட்டங்களுக்குக் கூடும் மக்கள் தொகையைப் பார்க்கும்போது, நிச்சயமாக பெருவாரியான மக்கள் இவ்வாக்களிப்பில் கலந்து கொள்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி:
இந்த வாக்கெடுப்பானது விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான விருப்பத்தினை அறிவதற்காகவே நடத்தப்படுவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆதற்குத் தங்களது பதில் என்ன?

பதில்:
மிகவும் நல்ல கேள்வி. தமிழீழக் கோரிக்கையானது விடுதலைப் புலிகளாலோ அல்லது ஏனைய போராட்ட இயக்கங்களினாலோ முன்வைக்கப்படவில்லை  என்பதனை ஈழத்தமிழர்களின் வரலாற்றை நன்கு அறிந்தவர்களுக்கு மிகத்தெளிவாகத் தெரியும். தமிழீழக் கோரிக்கையானது 1950களில் உருவாகியது. 1976ம் ஆண்டு நடைபெற்ற வட்டுக்கோட்டையில் சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்த மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டு, 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான தமிழ்மக்களால் உறுதி செய்யப்பட்டது. மக்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே அரசியல் இயக்கங்களோ போராட்ட இயக்கங்களோ வரமுடியும். எதிர்மாறாக இருப்பதற்கு எப்பொழுதுமே சாத்தியமில்லை.

கேள்வி:
இறுதியாக நோர்வேவாழ் வாக்காளப் பெருமக்களுக்கு
நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில்:
ஈழத்தமிழர்களின் வேரையே அசைத்துப் பார்க்கும்
அபாயமான, அசாதாரணமான இச்சூழ்நிலையில்
புலம்பெயர் தமிழர்களான எம்மக்கள் முன்னுள்ள
வரலாற்றுக் கடமையை, வாய்ப்பை சர்வதேசத்துக்குப் புரியக்கூடிய
ஜனநாயக வழியில் நிறைவேற்றுவோம்.

ஈழத்தமிழர்களின் இன்னலற்ற வாழ்வுக்கான வழி
ஏதென்ற எம்மவர் முடிவானது, சர்வதேசத்தின் இதயத்தை
அசைக்கவல்லது என, என்போன்றவர்கள் திடமாக நம்புகின்றோம்
வாருங்கள் சகோதரர்களே
வளமான எம்மவர் வாழ்வுக்காய்
வழிசமைத்திடுவோம் - நம்பிக்கை
ஒளி கொடுத்திடுவோம்